தூத்துக்குடி அருகே பைக் மீது லாரி மோதிய கோர விபத்தில், தனியார் நிதி நிறுவன துணை மேலாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தூத்துக்குடி பூபால் ராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தன சுடலைமணி (22). இவர் பிரையண்ட் நகரில் உள்ள ஒரு தனியார் நகைக்கடன் வழங்கும் வங்கியில் துணை மேலாளராகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், இன்று காலை வங்கிப் பணிக்காக ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடிக்குச் சென்றிருந்தார். மாலை மீண்டும் தூத்துக்குடி திரும்பிக்கொண்டிருந்தபோது, தருவைகுளம் அருகே எதிர்பாராத விதமாக லாரி, இவரது இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சந்தன சுடலைமணி, பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த தருவைகுளம் போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.