தூத்துக்குடி போல்பேட்டை நியாயவிலைக்கடையில் ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண உதவி வழங்கும் திட்டத்தை, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.

தமிழகத்தில் கொரோனா நிவாரணமாக தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று தேர்தல் பிரசாரத்தின்போது மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

தேர்தலில் வெற்றி பெற்று கடந்த 7-ந் தேதி முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும் கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் வழங்குவதற்கான உத்தரவில் முதல் கையெழுத்தை போட்டார். இதையடுத்து கொரோனா நிவாரண உதவி வழங்குவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ரூ.4 ஆயிரத்தில் முதல் தவணையாக இந்த மாதம் ரூ.2 ஆயிரமும், அடுத்த மாதம் மீதி ரூபாய் ரூ.2 ஆயிரமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ரே‌ஷன் கடைகளில் முற்பகல் நேரத்தில் மட்டும் இந்த பணத்தை வழங்குவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

டோக்கன் வினியோகம் செய்து, அதன் அடிப்படையில் குடும்ப அட்டைதாரர்களை வரவழைத்து கொரோனா நிவாரண தொகையை வழங்க திட்டமிட்டனர். அதன்படி  ரூ.2 ஆயிரம் நிவாரண உதவிக்கான டோக்கன்கள் கடந்த 10-ந் தேதி முதல் வழங்கப்பட்டது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் அனைத்து ரே‌ஷன் கடைகளிலும் டோக்கன் வழங்கும் பணிகள் நடைபெற்றது. நாள் ஒன்றுக்கு தலா 200 குடும்பத்தினர், நிவாரண தொகை பெறும் வகையில்  டோக்கன்களை ரே‌ஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று வழங்கினர்.

அதனைத்தொடர்ந்து இன்று 15-ந் தேதி (சனிக்கிழமை) முதல் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண உதவி வழங்கப்படுகின்றன.

அதன்தொடர்ச்சியாக, தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள நியாயவிலைக்கடையில் ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண உதவி வழங்கும் திட்டத்தை, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், திமுக பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன், ஆனந்தசேகரன், ஜீவன் ஜேக்கப் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.