தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று அதிகாலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி முன்னணி அரசியல் தலைவர்கள் பலரும் ஓய்விலும், வழிபாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தவெக தலைவர் விஜய் நேற்றிரவு சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக இன்று அதிகாலை திருச்செந்தூரை சென்றடைந்தார்.

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பட்டு வேட்டி மற்றும் பட்டுச் சட்டை அணிந்து பாரம்பரிய உடையில் விஜய் வருகை தந்தார். அவருக்கு கோவில் திரிசுதந்திரர்கள் சார்பில் 'பூரண கும்ப மரியாதை' அளிக்கப்பட்டது. மேலும், முருகப் பெருமானின் அடையாளமான 'வெற்றிவேல்' வழங்கி அவர் கௌரவிக்கப்பட்டார்.

கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு, திருச்செந்தூர் கடற்கரை ஓரத்திலும் விஜய் வழிபாடு நடத்தினார். அவருடன் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மேலாளர் ஜெகதீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

விஜய்யின் வருகையை அறிந்த அவரது ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் அதிகாலை 4 மணிக்கே கோயில் வளாகத்தில் குவியத் தொடங்கினர். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்களும் ரசிகர்களும் விஜய்யை காண முண்டியடித்ததால், அசம்பாவிதங்களைத் தவிர்க்க திருச்செந்தூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தேர்தலுக்குப் பிந்தைய ஓய்வுக்காக முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானலில் குடும்பத்துடன் ஓய்வெடுத்து வருகிறார். துணை முதல்வர் உதயநிதி துபாய் பயணம் மேற்கொண்டுள்ளார். அதிமுக நிர்வாகிகள்பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சூழலில், தமிழக அரசியலில் புதிய வரவாக களம் கண்டுள்ள விஜய், தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக திருச்செந்தூர் முருகனை தரிசித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.