வேலைக்காக ஈரான் நாட்டுக்குச் சென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லாத நிலையில், அவரைத் தேடிக் கண்டுபிடித்துத் தருமாறு அவரது தந்தை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

தூத்துக்குடி  திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஞானம். இவரது மகன், கடந்த 2025 மே 7-ம் தேதி அன்று ஈரானில் உள்ள ஒரு சரக்குக் கப்பலில் வேலைக்காகச் சென்றுள்ளார். அங்கு அவர் பணியில் இருந்து வந்த நிலையில், தற்போது அந்நாட்டில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாகத் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக மகனிடமிருந்து எந்தவிதமான அழைப்போ அல்லது தகவலோ வராததால் ஞானத்தின் குடும்பத்தினர் பெரும் கவலையில் உள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஞானம்  மனு அளித்துள்ளார்

அந்த மனுவில்,  போர் பதற்றம் நிலவும் சூழலில் மகனைப் பற்றிய எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. அங்குள்ள அசாதாரண சூழ்நிலையால் மகனின் உயிருக்கு ஆபத்து இருக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு, காணாமல் போன தனது மகனைப் பத்திரமாக மீட்டுத் தர மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் .