தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் தென்காசியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்த சுண்டப்பபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி (58). இவர் லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இன்று தனது வாகனத்தில் தூத்துக்குடியிலிருந்து மதுரை நோக்கி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

வாகனம் எட்டயபுரம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரி திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த முனியாண்டி, தனது வாகனத்தை நிறுத்த பிரேக் போட்டுள்ளார். இருப்பினும், கட்டுப்பாட்டை இழந்த வாகனம் முன்னால் நின்ற லாரியின் பின்புறத்தில் பலமாக மோதியது.

இந்த மோதலில் பலத்த காயமடைந்த முனியாண்டியை அப்பகுதியினர் மீட்டு, சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், முனியாண்டி ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். விபத்துக்குக் காரணமான மற்றொரு லாரியின் ஓட்டுநர்  குஜராத் மாநிலம், காந்திதாம் சேர்ந்த  ரஞ்சித் ஜோத் என்பவரை எட்டயபுரம் போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.