பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டார். கோவை சைபர் க்ரைம் போலீஸார் கைது நடவடிக்கையை மேற்கொண்டு அவரை கோவை அழைத்துச் சென்றனர்.

காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக அவர் மீது கோவை சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில், சவுக்கு சங்கர் தேனி வந்திருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் தேனியில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த அவரை கோவை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர். அங்கிருந்து அவர் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சவுக்கு சங்கரை கோவை அழைத்துச் சென்ற போலீஸ் வாகனம், தாராபுரம் அருகே விபத்தில் சிக்கியது. சவுக்கு சங்கர் மற்றும் போலீசார் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து வழியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு கோவைக்கு சவுக்கு சங்கர் அழைத்து செல்லப்பட்டார்.

இந்தநிலையில், சவுக்கு சங்கருக்கு ஆதரவாக  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசின் ஊழல்களை தொடர்ந்து மக்களிடத்தில் அம்பலப்படுத்தும் சவுக்கு மீடியா ஊடகத்தை முடக்கும் முனைப்பில் அந்நிறுவன ஊழியர்கள் மற்றும் வாசகர்களை குறிவைத்து காவல்துறையை ஏவி பொய் வழக்குகளில் கைது செய்யும் திமுக அரசின் அராஜகப் போக்கிற்கு எனது  கண்டனம்.

ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளை தன் கைகளுள் வைத்துக்கொண்டு, தான் ஏதோ நல்லாட்சி வழங்குவது போல ஒரு பொய் பிம்பத்தை உருவாக்கி, அந்த மாய உலகத்தில் மு.க.ஸ்டாலின்  அவர்கள் திளைத்துக் கொண்டிருப்பதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன். அதனையும் மீறி சில ஊடகங்கள் இந்த விடியா ஆட்சியின் அவலங்களை மக்களிடத்தில் அம்பலபடுத்தினால், தன் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை ஏவி பொய் வழக்குகளால் முடக்க முயற்சிப்பது திமுகவிற்கே உரித்தான அராஜக பாசிச குணம்.

சவுக்கு மீடியாவின் ஊழியர்கள் மற்றும் வாசகர்கள் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏவல்களை உடனடியாக கைவிட்டு, மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதிசெய்யுமாறு  முதல்வரை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.