ஸ்ரீவைகுண்டம் அருகே அ.தி.மு.க., பிரமுகர் பிச்சையா கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே கொங்கராயகுறிச்சி கிராமத்தில், புதுமனை தெற்கு தெருவை சேர்ந்தவர் பிச்சையா. இவர் அ.தி.மு.க., கிளைக்கழக செயலாளராக இருந்தார். ஊர்தலைவராகவும் இருந்து வந்தார். பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு, கிராமத்தில் உள்ள இந்திரா நினைவு குடியிருப்பு பகுதியில் வந்த போது, பிச்சையாவை மறித்து வெட்டினர். சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

பிச்சையா கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த அவரது உறவினர்கள், அவரது சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அங்கிருந்த மற்றொரு தரப்பினர் வீடுகள் மீது கல்வீசி தாக்கினர். டீக்கடைகள் சூறையாடப்பட்டன. கலவரம் ஏற்பட்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து, இந்த கொலை தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம் இன்று தீர்ப்பு கூறினார். அதில் அதே கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி ராஜ், ராபின், ரவி, அன்பு பட்டுராஜ் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் மோகன்தாஸ் சாமுவேல் ஆஜரானார்.