• vilasalnews@gmail.com

அவள் மீது திணிக்கப்பட்ட பொய் கட்டுகளை உடைத்தெறிய வேண்டும்... கர்ஜிக்கும் கனிஷ்டா!

  • Share on

இந்த பேரண்டத்தில் ஒரு சிறு புள்ளியான பூமியில், வாழும் அனைத்து உயிர்களும் இந்த இயற்கைக்கு சமமே. இந்த உயிர்களில் மானுட இனம் பரிணாம வளர்ச்சி பெற்று நாகரித்தில் தன்னை மேன்படுத்தி கொண்டது.


பெண்ணும் ஆணும் இணைந்திருத்தலே மானுடவியலின் அழகியல். ஆனால் பல நூற்றாண்டு தொட்டு இந்த வாழ்வியலில் பல தரப்பட்ட முரண்பாடுகள், கட்டமைப்புகள், வழிவகைகளை கொண்டு வந்து இந்த ஆணையும் பெண்ணையும் நேர் எதிர்க்கோட்டில் நிறுத்தியுள்ளது இந்த சமூகச் சூழல்.


இச்சூழலால் ஒருவரை ஒருவர் அடிமைப்படுத்தும் முனைப்புடன் வாழ்வியலின் அழகியலை தொலைத்துக் கொண்டே இருக்கிறோம். இவற்றின் பின் மிகப்பெரிய கோட்பாடு உள்ளது. அவை ஆதிக்க மனநிலையை உருவாக்கி மானுடவியலை சிதைக்கிறது. இந்த சிதைவில் பலகாலகட்டமாக சிக்குண்டு தவிப்பது பெண்கள் தான். 


மனித குலத்தின் ஆரம்ப நிலையில் ஆளுமையிலும், வீரத்திலும், உழைப்பிலும் முன்னோடியாக இருந்த பெண் இனம் தற்போது தன்னை பலவீனமாகவும் சுயபச்சாதாபத்திலும் நடப்பவை விதி என்றும் தன்னைத் தானே நொந்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். பெண்களின் பிறப்பு தொடங்கி இறப்பு வரையிலும் ஒடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்பது சமூக எதார்த்தம்.


நீங்கள் என்றாவது சிந்தித்தது உண்டா? 10வது, 12வது மற்றும் கல்லூரிகளிலும் முதல் மதிப்பெண் பெற்று அதிக அளவில் தேர்ச்சி பெற்ற பெண்கள் தொழில் முனைவோராக, கலைத்துறை, அறிவியல் துறை, இலக்கியத்துறை போன்றவற்றில் விரல் விட்டும் எண்ணும் அளவிலே இருக்கின்றார்களே ஏன்? அவர்கள் அறிவு வளர் வளர குன்றிவிட்டதா? இல்லை மடைமாற்றப்பட்டு மழுங்கடிங்கப்பட்டு விட்டதா? இதனை பெண்களே உணராதது தான் கொடுமையிலும் கொடுமை. இவற்றை உணர வைப்பதே பெண் விடுதலை. இதற்கு சமூகத்தில் நிலவும் அடிப்படை முரண்களுக்கு தீர்வை கண்டறிய வேண்டும். அவள் மீது திணிக்கப்பட்ட பொய் கட்டுகளை உடைத்தெறிய வேண்டும்.


பெண் விடுதலை பெற, பெண்கள் அக விடுதலை பெற வேண்டும். பெண்ணுக்கான எதிரி ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் என்னும் பகைமை சக்தியே. இந்த மூன்றையும் ஒழித்தால் பெண் விடுதலை சாத்தியப்படும். ஆதிக்கம் எந்த நிலையில் வந்தாலும் அதனை ஜனநாயகப்படுத்த வேண்டும். ஒடுக்குமுறையை எதிர்கொண்டு மீள வேண்டும். சுரண்டலை எதிர்த்து போராட வேண்டும்.


கலை, இலக்கியம், தொழில் முனைவு, தொழில் மேலாண்மை என அனைத்து தளங்களிலும் தடம் பதிக்க பெண்கள் முனைப்பெடுக்க வேண்டும். ஆணும் பெண்ணும் சமம் என்பதை விட இருவரும் தனித் தன்மையுள்ளவர்கள் என்பதே பொறுத்தம் மிக்கது. பெண் விடுதலை அக விடுதலை பெறுவதே. அது சுய மரியாதையுடன் வாழ வழி செய்கிறது. சுயமரியாதை சுதந்திரத்தை தரவல்லது.


பெண்ணே அக விடுதலை பெறு!

சுதந்திர காற்றை சுவாசி

இந்த உலகம் உனக்கானது தான்!


- கனிஷ்டா, கட்டுரையாளர், தூத்துக்குடி.

  • Share on

ஆறு நாட்களில் ஊமைத்துரை கட்டிய பாஞ்சாலங்குறிச்சி கோட்டை... அதிர்ந்து அதிசயத்து போன ஆங்கிலேயே இராணுவ அதிகாரி!

  • Share on