தூத்துக்குடி திருச்செந்தூர் சாலை பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடமாடிய இரண்டு இளைஞர்களை தென்பாகம் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த சேர்மராஜ் என்பவரின் மகன்  சக்திவேல் (27) மற்றும் கீதாஜீவன் நகரைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரின் மகன் சக்திவேல் (22) ஆகிய இருவரும் திருச்செந்தூர் சாலை பகுதியில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கவுராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த அந்த இருவரையும் சுற்றி வளைத்தனர். போலீசார் விசாரணை நடத்த முயன்றபோது, பிடிபட்ட இளைஞர்கள் இருவரும் காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்து ஆபாசமாக பேசியதுடன், அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடை பெற்று வருகிறது.