தமிழக அரசியலில் ஊழலற்ற நிர்வாகம், தூய சக்தி என அதிரடி முழக்கங்களுடன் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், தற்போது ஒரு சட்ட ரீதியான பின்னடைவைச் சந்தித்துள்ளார். மற்ற அரசியல் இயக்கங்களை ஊழல் படிந்தவை என விமர்சித்து வரும் நிலையில், வருமான வரி விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படத்திற்காக நடிகர் விஜய் பெற்ற ரூ.15 கோடி ஊதியத்தை, அவர் தனது வருமான வரி கணக்கில் முறையாகக் காட்டவில்லை என்பது வருமான வரித்துறையின் குற்றச்சாட்டு. இது தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் இந்த விபரங்கள் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த அபராதத்தை எதிர்த்து விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது."தாம் நேர்மையான முறையில் வரி செலுத்தி வருவதாகவும், அபராதம் விதிப்பதற்கான காலக்கெடு முடிந்துவிட்டதால் இந்த உத்தரவு செல்லாது" எனவும் தொழில்நுட்ப காரணங்களை முன்வைத்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வருமான வரித்துறையின் நடவடிக்கையில் முறைகேடு இல்லை எனக் கூறி, விஜய்யின் மனுவைத் தள்ளுபடி செய்தார். மேலும், வருமான வரித்துறை விதித்த அபராதம் செல்லும் என்றும் உறுதிப்படுத்தினார்.