தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் வெளித் துறைமுகத் திட்டம் மற்றும் பாரத் சரக்குப் பெட்டக கப்பல் சேவை நிறுவனத்திற்காக ரூ.15,000 கோடி மதிப்பிலான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம், இந்தியாவின் கடல்சார் உட்கட்டமைப்பை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில் இரண்டு மிக முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

வெளித் துறைமுகத் திட்டத்திற்கான நிதி ஏற்பாடு (Outer Harbor Project) வ.உ.சி. துறைமுகத்தின் வெளித் துறைமுகத் திட்டத்தை மேம்படுத்துவதற்காக இந்திய ரயில்வே நிதிக் கழகம் (IRFC) மற்றும் சாகர்மாலா நிதிக் கழகம் (SMFCL) ஆகியவற்றுடன் முத்தரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக அதிகபட்சமாக ரூ.15,000 கோடி வரை கூட்டு நிதி ஏற்பாடுகளை செய்ய இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.  'Hybrid Annuity Model' (HAM) முறையில் அலைத் தடுப்புச் சுவர் கட்டுதல், ஆழப்படுத்தும் பணிகள் மற்றும் நில மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படும்.

இக்கூட்டு முயற்சி நிதி ஆதாரங்களை அடையாளம் காணுதல், திட்டத்தைச் செயல்படுத்துதல் மற்றும் அறிவுப் பகிர்வு மூலம் 'கடற்சார் பார்வை 2030' மற்றும் 'பிரதமரின் கதி சக்தி' திட்டங்களை விரைவுபடுத்த உதவும்.

பாரத் சரக்குப் பெட்டக கப்பல் சேவை நிறுவனம் (BCSL) மத்திய அரசின் 'ஆத்மநிர்பர் பாரத்' முயற்சியின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள 'பாரத் சரக்குப் பெட்டக கப்பல் சேவை நிறுவனத்தில்' (BCSL) வ.உ.சி. துறைமுகம் ஒரு முக்கிய பங்குதாரராக இணைந்துள்ளது.

ஏற்றுமதி-இறகுமதி (EXIM) மற்றும் உள்நாட்டு கடல்சார் வர்த்தகத்திற்காக கப்பல்கள் மற்றும் சரக்குப் பெட்டகங்களை வாங்குதல், பராமரித்தல் மற்றும் வாடகைக்கு விடுதல் போன்ற பணிகளை இந்த நிறுவனம் மேற்கொள்ளும்.

இந்திய கப்பல் கழகம் (SCI), இந்திய சரக்குபெட்டக கழகம் (CONCOR), சாகர்மாலா நிதிக் கழகம் (SMFCL), ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் மற்றும் சென்னை துறைமுக ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இந்த முயற்சி 2026-27 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சரக்குப்பெட்டக உற்பத்தி உதவித் திட்டத்துடன் (CMAS) ஒத்திசைந்து செயல்படும்.

மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர்  சர்பானந்தா சோனோவால் மற்றும் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. வ.உ.சி. துறைமுகத்தின் சார்பில் அதன் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் கையெழுத்திட்டார்.

இந்தச் சாதனைகள் வ.உ.சி. துறைமுகத்தை உலகத் தரம் வாய்ந்த நவீன துறைமுகமாக மாற்றுவதுடன், 'Maritime Amrit Kaal 2047' மற்றும் 'வளர்ந்த இந்தியா' (Viksit Bharat) ஆகிய இலக்குகளை அடைய வலுவான அடித்தளமாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.