தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிகளுக்கான எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் - 2, எட்டயபுரம் - 10, கயத்தாறு - 21, கோவில்பட்டி - 7, ஓட்டப்பிடாரம் - 5, சாத்தான்குளம் - 8, ஸ்ரீவைகுண்டம் - 4, திருச்செந்தூர் - 7, விளாத்திகுளம் - 13 என காலியாக உள்ள 77 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கான எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு தேதியை மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், தற்போது தேர்வுகளை ஒத்திவைப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளர். ஏற்கனவே வயது வரம்பு உயர்த்தப்பட்டதால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள், மறு அறிவிப்பு வெளியிடப்பட்டு மீண்டும் நடைபெறுவதாக இருந்த நிலையில் தற்போது மறுபடியும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது தேர்வர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது :-

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஏரல், சாத்தான்குளம், கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் மற்றும் கயத்தார் ஆகிய 9 தாலுகாக்களில் 2025 ஆம் ஆண்டு கிராம உதவியாளர் பணி நியமனம் தொடர்பாக உச்சபட்ச வயது வரம்பு மறுவரையறைக்கு பின்னர், 01.11.2025 முதல் 15.11.2025 வரையிலும் தாலுகா அலுவலகங்களில் நேரிலும் மற்றும் தபால் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதைத் தொடர்ந்து 17.12.2025 (புதன்கிழமை) அன்று கிராம உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வும், அதனைத் தொடர்ந்து 02.01.2026 (வெள்ளிக்கிழமை) அன்று முதல் நேர்முகத் தேர்வும் நடைபெற இருந்தது. இந்த எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அனைத்தும் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.