கோடை விடுமுறை முடிந்து கடந்த திங்கட்கிழமை அன்றுதான் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், இன்று ( ஜூன் 9 ஆம் தேதி ) தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான். அந்த வகையில் சுமார் 45 நாட்கள் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் கடந்த ஜூன் 2ம் தேதி திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரும் நிலையில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை கிடைத்தது.

இந்நிலையில், முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் முக்கிய திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு  ஜூன் 9 ஆம் தேதியான இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்ட செய்தி குறிப்பில்:-

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாகம் திருவிழாவை முன்னிட்டு வருகிற வைகாசி 26 ஆம் தேதி ஜூன் 9ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881) - ன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் ஜூன் 14ம் தேதி இரண்டாம் சனிக்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலக வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.