ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரியில் வீரர் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் முழு உருவ வெண்கல சிலை அமைக்க சட்டமன்றத்தில் சண்முகையா எம்.எல்.ஏ கோரிக்கை வைத்ததையடுத்து, அதனை நிறைவேற்றி தந்த தமிழக அரசிற்கும், சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவிற்கும் வீரர் சுந்தரலிங்கம் வம்சாவழியினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரியில் இந்திய சுதந்திரபோராட்ட மாவீரர் வீரர் சுந்தரலிங்கனார் அவர்களின் மணிமண்டபத்தில் முழு உருவ வெண்கலச்சிலையும் நூலகமும்  அமைத்திட, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கைக்கு அப்போது பதில் அளித்த செய்தித் துறை அமைச்சர்  சாமிநாதன்,

"சட்ட மன்ற உறுப்பினர் சண்முகையா குறிப்பிட்டிருக்கிற அந்த நினைவிடத்தை விரைவில் நேரடியாக நாங்கள் பார்வையிடுவதற்கு திட்டமிட்டிருக்கின்றோம். அந்த நினைவிடத்தைப் நேரடியாகப் பார்வையிட்டு, அதற்கேற்ப நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம்" என தெரிவித்தார்.

இதனையடுத்து, தற்போது கவர்னகிரியில் வீரர் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் குதிரையில் அமர்ந்தவாறு அவரது முழு உருவ வெண்கல சிலை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில், கோரிக்கையை நிறைவேற்றி தந்த தமிழக அரசிற்கும், சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவிற்கும் வீரர் சுந்தரலிங்கம் வம்சாவழியினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.