<p><b>தூத்துக்குடியில் அதிகாலையில் சாலை ஓரத்தில் நிறுத்தியிருந்த கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;</b></p><p>தூத்துக்குடி டூவிபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் செந்தில்குமார் (34), சிவில் காண்ட்ராக்டரான இவர் நேற்று தனது டாட்டா சுமோ காரை, தனது வீடு அருகே சாலையோரத்தில்&nbsp; நிறுத்தியிருந்தார். இன்று அதிகாலை 2 மணி அளவில் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.&nbsp; இதனைக் கண்ட அவர், தூத்துக்குடி தீயணைப்பு படை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார்.&nbsp;</p><p>இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து மத்திய பாகம் காவல் ஆய்வாளர் ஐயப்பன், உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். </p><p>காருக்கு மர்ம நபர்கள் யாரேனும் தீவைத்தார்களா? அல்லது வேறு எதுவும் காரணமா? என போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>